×

சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,மே1: திருமருகல் அருகே பனங்குடியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் உள்ளது. ஆலை விரிவாகத்திற்காக ரூ.31 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு 620 ஏக்கர் நிலம் பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம், முட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாய நிலம் கையகப்படுத்தியது. நிலம் கையகப்படுத்தியதற்கு 2013 இழப்பீடு சட்டத்தின் மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தின் படி சாகுபடிதாரர்கள், கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் இழுத்தடித்து வருகிறது.

இந்நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு எல்லைகள் அமைத்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்காக அளவீடு செய்ய நேற்று (30ம் தேதி) அதிகாரிகள் எம்.பனங்குடி பகுதிக்கு வருவதாக விவசாயிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து 500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் அங்கு குவிந்தனர். பல மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் அளவீடு செய்ய அங்கு வரவில்லை. இதனால் விவசாயிகள் நியாயமான சட்டத்திற்கு உட்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு சிபிசிஎல் நிறுவனம் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள், நில உரிமைதாரர்கள், சாகுபடி தாரர்கள், கூலித் தொழிலாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனத்திற்கு நிலத்தை கொடுக்கமாட்டோம் என கோஷங்கள் எழுப்பினர்.

The post சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : CBCL ,Nagapattinam ,Union Government Public Sector Enterprise ,CPCL ,Panangudi ,Tirumarukal ,Narimanam ,Gopurajapuram ,
× RELATED சிபிசிஎல் நிறுவனம் பணிகளை...